கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கத் தயாராகும் அரசாங்கம்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்ட இளம் ஊடகவியலாளர்கள்

Staff Writer | Author . Translate to English or සිංහල 08. 04. 2020 | 10.19pm
கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கத் தயாராகும் அரசாங்கம்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்ட இளம் ஊடகவியலாளர்கள்

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக இலங்கை அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமையை அரசாங்கம், பொலிஸார் மீறத் தயாராகுவதாக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பாக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாடிலேயே மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘இணையத்தளத்தில் பொய் அல்லது வெறுப்புக் கருத்துக்களை வெளியிடுவோருக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.

‘அரச ஊழியர்கள் கோவிட் 19 கொரோனாவுக்கு எதிராக பெரும் தியாகத்துடன் பணியாற்றுகின்றனர். அவர்களின் பணியில் ஏற்படும் சிறு தவறுகளை விமர்சிக்கும் படியாகவும், கேலிக்குட்படுத்துவதன் ஊடாக அவர்களது பணிக்கு தொந்தரவு ஏற்படுத்தும் விதமாகவும் பதிவுகளை இணையத்தில் பதியப்படுவதாக அறியக்கிடைத்துள்ளது’ என்று பொலிஸார் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, அரச ஊழியர்களின் சிறு தவறுகளை விமர்சிப்போரை கைதுசெய்வதற்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இது அரசியலமைப்பின் ஊடாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமையை மீறுவதாகும்.

நாடு கொரோனா பரவல் போன்ற பயங்கர அனர்த்தமொன்றுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், போலிச் செய்திகள் மற்றும் இனவெறுப்புப் பிரச்சாரங்களைக் கட்டுப்படுத்துவதும் இன்றியமையாததொன்றாகும். எனினும், அதன் போர்வையில் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக இலங்கை அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமையை அரசாங்கம், பொலிஸார் மீறத் தயாராகுவதை அங்கீகரிக்க முடியாது.

சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் இனங்களுக்கிடையிலான வெறுப்புப் பிரச்சாரங்களைத் தடுப்பதற்கு நாட்டில் பலமான சட்டத் துறையொன்று காணப்படுகின்றது. அவ்வாறிருக்கையில், அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள் விமர்சிக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த சட்டத்தைப் பயன்படுத்துவது பயங்கர நிலையாகும்.

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் பொலிஸ் மா அதிபரின் தீர்மானம் குறித்து பரிசோதனையொன்றை மேற்கொள்வதற்கும், இலங்கை அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமையை பாதுகாப்பதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வரவேண்டும்.

Share