புதுவருடத்தை குடும்பத்தினரோடு மட்டுப்படுத்திக்கொள்ளவும்

Staff Writer | Author . Translate to English or සිංහල 08. 04. 2020 | 5.37pm
புதுவருடத்தை குடும்பத்தினரோடு மட்டுப்படுத்திக்கொள்ளவும்

சிங்கள மற்றும் தமிழ் புதுவருட சம்பிரதாயங்களை குடும்ப உறுப்பினர்களோடு மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஊரடங்குச் சட்ட ஒழுங்குகள் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அவதானமுள்ள பிரதேசங்களாக கண்டறியப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ் மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரை நீடிக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை வியாழக் கிழமை காலை 6.00 மணியில் இருந்து மாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, மீண்டும் மாலை 4.00 மணிக்கு அமுலுக்கு வரும். ஏனைய மாவட்டங்களில் மீண்டும் எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 6.00 மணியில் இருந்து மாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

இன்றிலிருந்து எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அரச, தனியார் நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்பட்டுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவை தவிர்;ந்த வேறு தேவைகளுக்காக மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே காணப்படுகின்றது. யாரும் குறித்த பிரதேசங்களுக்கு உள்நுழைவதோ, அங்கிருந்து வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரும் வரை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொதுமக்கள் நலன் சார்ந்தவையாகும் என்றும் அதனை முறையாக நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது.

Share