அரனாயக்க ஊரடங்குச் சட்டம் குறித்து பரவியவை பொய்: பொலிஸ் அறிக்கையை ஊடகங்கள் திரிவுப்படுத்தியுள்ளன

Staff Writer | Author . Translate to English or සිංහල 06. 04. 2020 | 12.09pm
அரனாயக்க ஊரடங்குச் சட்டம் குறித்து பரவியவை பொய்:  பொலிஸ் அறிக்கையை ஊடகங்கள் திரிவுப்படுத்தியுள்ளன

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கண்டி, புத்தளம் மற்றும் யாழ் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதோடு, கேகாலை மாவட்டத்தின் அரனாயக்க பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவில்லை என்று பரவிய செய்தியில் உண்மைத் தன்மையில்லை என தெரியவந்தது.

அரனாயக்க பிரதேச பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் நேற்று (05) இரவு மேற்கொண்ட அறிவித்தல் திரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அரனாயக்க பொலிஸ் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரனாயக்க பிரதேச இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது இரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்புக்காக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும், பொதுமக்கள் வீட்டிலே இருக்கும்படியும் கடைகளை மூடிவிடுமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். எனினும், ஊரடங்குச் சட்டம் அங்கு தளர்த்தப்பட மாட்டாது என்று பொலிஸார் தெரிவிக்கவில்லை.

பொலிஸாரின் அறிவித்தல் கீழ்வரும் வீடியோவில் காணப்படுகின்றது.

இந்த அறிவித்தலைத் தொடர்ந்து அரனாயக்கவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட மாட்டாது என சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். அது தொடர்பாக நாம் அரனாயக்க பொலிஸாரிடம் விளக்கம் கோரினோம். அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக கீழ்வருமாறு விளக்கமளித்தனர்.

‘அரனாயக்கவில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதில்லை என்று பொலிஸார் கூறவில்லை. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளையில், அத்தியாவசிய தேவைகள் இருப்பின் மாத்திரம் வெளியே செல்லும்படி அறிவிக்கப்பட்டது.’

கேள்வி: அவ்வாறு அறிவிக்கக் காரணமென்ன?

பதில்: ஆம், அரனாயக்கவில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவர் மார்ச் 13ஆம் திகதி கொழும்பில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அவர் அரனாயக்க வந்து இருபது நாட்களுக்கு மேலாகின்றது. கொழும்பில் இருந்து வந்து, சில இடங்களுக்கும் சென்றுள்ளார். அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என்று நாம் கூறுவதில்லை. அவரது இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனுக்கே குறித்த அறிவிப்பை மேற்கொண்டோம்.

கேள்வி: ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதில்லை என்ற செய்தி பொய்யானதா?

பதில்: ஆம், அது போலி செய்தியாகும். அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியேவர அனுமதியுண்டு. தேவையின்றி வரவேண்டாமென்றோம்.

இதுதொடர்பாக பதிவாகியிருந்த செய்திகளைக் கீழே காணலாம்.Share