முஸ்லிம்கள் குறித்த ஒலிப்பதிவில் இருந்த ‘போலி புலனாய்வு அதிகாரி’ இனங்காணப்பட்டுள்ளார்

Staff Writer | Author . Translate to English or සිංහල 05. 04. 2020 | 6.30pm
முஸ்லிம்கள் குறித்த ஒலிப்பதிவில் இருந்த  ‘போலி புலனாய்வு அதிகாரி’ இனங்காணப்பட்டுள்ளார்

புலனாய்வுத் தகவல் என்று போலி ஒலிப்பதிவொன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நபர் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்ட பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.

முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனா தொற்றுநோயைப் பரப்புகின்றனர் என்று தனது உயர் அதிகாரி கூறியதாக ஒலிப் பதிவை வெளியிட்டுள்ள நபர் தான் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் போன்றும் காட்டிக்கொண்டுள்ளார். எனினும் அவர் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவரல்ல என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

இந்த போலிச் செய்தியை உருவாக்கிய நபர் மற்றும் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர்களையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேரங்காடிகள் மற்றும் கடைத் தெருவுக்குச் செல்லும் முஸ்லிம்கள் கொரோனா பரப்பும் நோக்கில் பொருட்களில் எச்சில் பூசுவதாகவும், அதனை நிரூபிப்பதற்கான வீடியோ பதிவுகள் இருப்பதாகவும் குறித்த நபர் வெளியிட்டிருந்த ஒலிப்பதிவில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸ் அதிகாரியொருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

‘இந்த தினங்களில் பேரங்காடிகள் திறந்திருப்பதும் இல்லை. அதன் காரணமாக முஸ்லிம்கள் அல்ல, வேறு யாராலும் வியாபார நிலையங்களுக்குச் செல்ல முடியாது. இது இனங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்துவதற்கு புனையப்பட்ட கதையாகும். பொய்யான செய்தியை உண்மை என மக்களை நம்பச் செய்யவே வீடியோ பதிவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். சுயபுத்தியுடன் சிந்திப்பவர்கள் இதனைப் பகிரமாட்டார்கள். ஏதாவதொரு விடயம் அறியக்கிடைத்தால், தர்க்க ரீதியாக சிந்தித்து தீர்மானமெடுக்கவும்’. என்று அவர் தெரிவித்தார்.Share