கொரோனா அவதானத்தை பொருட்படுத்தாமல் வேலைக்கு சமுகமளிக்கவும்- ஏற்றுமதி மேம்பாட்டு சபை

Staff Writer | Author . Translate to English or සිංහල 02. 04. 2020 | 5.37pm
கொரோனா அவதானத்தை பொருட்படுத்தாமல் வேலைக்கு சமுகமளிக்கவும்- ஏற்றுமதி மேம்பாட்டு சபை

சபுகஸ்கந்த தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள Trell-Borg லங்கா தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் உடனடியாக சேவையில் இணைந்துகொள்ள வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது. 

ஏற்றுமதி மேம்பாட்டு சபை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள அறிவித்தலின்படி, தொழிற்சாலை வளாகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் நடத்திச் செல்ல வேண்டும் என்றும், குறித்த அறிவித்தலுக்கமைய சேவையில் இணைந்துகொள்ளவில்லையெனின் அதற்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க, பியகம போன்ற பிரதான முதலீட்டு மேம்பாட்டு வலயங்களே மூடப்பட்டிருக்கையில், இவ்வாறு சபுகஸ்கந்த தொழில்சாலை வளாகம் உள்ள டயர் தயாரிப்புடன் தொடர்பான இந்த தொழிற்சாலை இயங்க ஆரம்பிப்பது பாரிய பிரச்சினையாகும். 

இது தொடர்பாக நாம் சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் எச். குலசேகரவிடம் வினவியபோது, தான் குறித்த வளாகத்தை பரிசோதிக்கச் சென்றதாகவும், அங்கிருந்தவர்கள் குறித்த கடிதத்தை முன்வைத்ததால் இதுகுறித்த எந்த நடவடிக்கையையும் தன்னால் முன்னெடுக்க முடியாது போனதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாயின் கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் அனுமதி தேவையென்று தான் குறித்த நிறுவனத்தின் பிரதான பொறியியலாளரிடம் கூறியதாகவும் சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

மேலும், இதுதொடர்பான தகவல்களைக் கோர, ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் யு. விஜேகோனைத் தொடர்புகொள்ள நாம் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. எனினும், அங்குள்ள உயர் அதிகாரியொருவர் கூறியதாவது, நாட்டின் ஏற்றுமதி நடவடிக்கைகளை நிலையாக வைத்திருக்க வேண்டிய காரணத்தினால் இவ்வாறான கடிதமொன்று வெளியிடப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார். நாட்டில் நிலவும் தொற்றுநோய் அனர்த்தம் காரணமாக பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களும் மூடியுள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதன் காரணத்தைக் கோரிய போதும், அவர் அதுகுறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.

இந்த நிறுவனத்தில் 400க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை மாற்ற அடிப்படையில் பணியாற்றுகின்றனர். நாட்டில் கொரோனா தொற்று பரவும் அபாயத்தில்,  மக்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென்று விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏற்றுமதி மேம்பாட்டு சபை இவ்வாறான அறிவித்தல் மூலம் ஒரு நிறுவனத்திற்கு இயங்க அனுமதிப்பது நாட்டில் பயங்கரமான நிலையை ஏற்படுத்தும்.

Trell-Borg  நிறுவனத்தின் மனித வள முகாமையாளர் சனத் பல்லியகுருவிடம் நாம் இதுதொடர்பாக வினவியபோது, தொலைபேசியில் எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்த முடியாதென்றும்- தம்மை அலுவலகத்தில் சந்தித்து உரையாடலாம் என்றும் தெரிவித்தார். நாட்டில் சூழ்நிலையைத் தெளிவுபடுத்தி, அவரைச் சந்திப்பது சாத்தியமில்லையென்று கூறியபோது - அது தனக்கு தொடர்பில்லாத விடயம் என்றும், இவ்விடயம் தொடர்பாக தன்னிடம் கதைக்க வேண்டுமெனின் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும் அழைப்பைத் துண்டித்தார்.    


Share