நாட்டினுள் அடிக்கடி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது பயங்கரமானது- மருத்துவ அதிகாரிகள்

Staff Writer | Author . Translate to English or සිංහල 31. 03. 2020 | 3.58pm
நாட்டினுள் அடிக்கடி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது பயங்கரமானது- மருத்துவ அதிகாரிகள்

நாட்டினுள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டுமெனின் அடிக்கடி ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தும் நடைமுறை உடன் நிறுத்தப்பட வேண்டுமென்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

அடிக்கடி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பிரதேசங்களில் சமூக தூரப்படுத்தல் 50 வீதத்தால் குறைவடைவதால் பயங்கரமான நிலைமை ஏற்படக்கூடும் என்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சமூக தூரப்படுத்தலை 80 வீதம் வரை அதிகரிப்பதற்கான அனைத்து நடைமுறைகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும். 

தொற்றுநோய் நிபுணத்துவ எதிர்வுகூறல்களின்படி, இலங்கையினுள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கிடையேயும் நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்படுவது ஏப்ரல் மாதம் இறுதிவரை நடைபெறக்கூடும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

31ஆம் திகதி மாலை கொரோனா நிலைமை குறித்து அரச மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தனர். 

முழுமையான தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சமூக தூரப்படுத்தல் 90 வீதமளவில் காணப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், அதிக அவதானமுள்ள பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தாமல் இருப்பதன் காரணமாக சமூக தூரப்படுத்தல் 70 வீதத்துக்கு அதிகமாக காணப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சமூக தூரப்படுத்தலை இலங்கை பூராகவும் 80 வீதமாக நடத்திச் செல்வதற்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா நோயாளர்களில் நூற்றுக்கு 80 வீதமானோர் சிறிய நோயறிகுறிகளையே காட்டுவதாகவும், நெருங்கியவர்களை இனங்கண்டுகொண்டாலும் நோய்த்தொற்றுக்குள்ளானவர்கள் தவறிவிடுவதற்கு இடம் காணப்படுவதாகவும், இனங்காணப்படும் நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரும் பரிசோதனைக்கூட ஆய்வுகளுக்கு உள்ளாக்கப்படுவதில்லை என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதற்கமைய சந்தேகத்துக்குள்ளான அனைவரையும் பரிசோதித்து, அவர்களுக்கு நோய்த்தொற்று இருப்பின் வேறுபடுத்தி, நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்பதோடு உலகில் உள்ள வேறு பரிசோதனை முறைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share